சிட்டு
சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !
ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !
உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!>>>>>>>>பொன்வண்டு
சேர்ந்து செய்வோம் !
துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !
துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !
வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !
சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !!!>>>>>>>>பொன்வண்டு
மரம் வளர்ப்போம்
தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !
அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !
அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !!!>>>>>>>>பொன்வண்டு
No comments:
Post a Comment