தமிழுக்குப் பெருமை தருவது நாடகக்கலை. முத்தமிழில் நாடகம்
இயலையும், இசையையும் தன்னகத்தே
கொண்டது. நாடகத்தின் வெற்றிக்குக் காரணம், நல்ல கதை, கதைப் பாத்திரங்களுக்கேற்ற நடிப்பு, உணர்ச்சியைத்
தக்க சமயத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல். நாடகக்கலையின் அறிவுபூர்வமான வளர்ச்சியே
திரைப்படம்.
மேடையில் வெற்றிபெற்ற நாடகங்களின் உரிமையை விலைக்கு
வாங்கித் திரைப்படமாகத் தயாரித்தனர். ஆனால், மேடையில் நடிக்கப்பட்ட நாடகங்கள் சிற்சில தவிர, மற்றவை
சிறப்பாகப் பாடக்கூடியவர்களால் வெற்றியடைந்தன. பெண் பாத்திரங்களை ஆண்களே ஏற்கும்
நிலை இருந்தது. பெரும்பாலும் புராணப் படங்களே மேடையில் நடிக்கப்பட்டன.
சங்கரதாஸ் சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்தபிறகே
நாடகத்துக்கு மதிப்பு ஏற்பட்டது.
தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர்.
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குநர் என்ற பல பரிமாணங்களைக்
கொண்டவர்.
தமிழில் அமைந்த முதல் உரைநடை நாடகமான லீலாவதி சுலோசனாவைப்
படைத்தும், நாடகத்தில் துன்பியல்
முடிவுகளை அமைத்தும் சாதனை படைத்தவர். தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன்
வழங்கப்பட்டவர்.
பிறப்பு: பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் 1873 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி சென்னையில் பம்மல் என்ற இடத்தில் பிறந்தார்.
பெற்றோர்: ப. விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாள் ஆவர்.
விலாசம்: சென்னை ஆச்சாரப்பன் வீதி இலக்க எண் 70 இல் உள்ளது.
இயற்பெயர்: திருஞான சம்பந்தம்
பெற்றோர்: ப. விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாள் ஆவர்.
விலாசம்: சென்னை ஆச்சாரப்பன் வீதி இலக்க எண் 70 இல் உள்ளது.
இயற்பெயர்: திருஞான சம்பந்தம்
கல்வி: பம்மல் சம்பந்த முதலியார் கற்றவர் மிகுந்த குடும்பத்தில்
பிறந்தார். எனவே சிறந்த அடிப்படைக் கல்வி இவருக்குத் தானாக வாய்த்தது. தமது ஐந்தாம்
வயதில் கல்விக்கான அடித்தளம் அமைக்கப்பட்டதாகச் சம்பந்த முதலியாரே
குறிப்பிடுகிறார். அதுமுதல் 1879 வரை
மூன்று பள்ளிக் கூடங்களில் கல்வி பயின்றார். மூன்றாவது பள்ளியான நரசிம்மலு
வாத்தியார் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலக் கல்வி கற்றார். 1880ஆம்
வருடம் மிகவும் புகழ் பெற்ற சென்னை பிராட்வேயிலுள்ள இந்து புரொப்பரைட்டரி (Hindu
Proprietory School)என்னும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து தொடர்ந்து
ஆங்கில வழிக் கல்வி பயின்றார். 1882ஆம் ஆண்டு சென்னை
பச்சையப்பன் கல்லூரிப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்றார். 1886ஆம் ஆண்டு முதல் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில்
வெற்றி பெற்றார். தொடர்ந்து பி.ஏ பட்டமும், 1897 ஆம் ஆண்டு
சட்டத்தில் பட்டமும் பெற்றுக் கொண்டார். 1898 ஆம் ஆண்டு
வழக்கறிஞராக பதிவு செய்துபணியாற்றத் தொடங்கினார்.
விசயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற
அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் புத்தகங்கள் பல வெளியிட்டு
வந்தார். இதன் காரணமாக சம்மந்தம் படிக்கத் தெரிந்த நாள் முதல் அவர்கள் வீட்டில்
ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையெல்லாம்
ஒவ்வொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார்.
1924: 1924 முதல்
1928 வரை நீதிமன்றத் தலைவராகவும் பணி செய்தார். பம்மல்
சம்பந்த முதலியார் நீதிபதியாக இருந்தபோது அவர் மனைவி இறந்துவிட்டார். அவருடன் வேலை
செய்பவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். பின் அவர்கள் அனைவரும்
வீட்டுக்குச் சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டு கோர்ட்டுக்குப் போகும்போது 12
மணி ஆகிவிட்டது. ஆனால் நீதிபதி பம்மல் சம்பந்த முதலியாரோ இவர்கள்
வருமுன்பே, 11 மணிக்கே வந்து வழக்கை விசாரித்துக்
கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன் கேட்டபோது பம்மல் சம்பந்த முதலியார்,
""இது என் துக்கம். என்னுடைய தனிப்பட்ட பிரச்னை. என்னுடைய
சுயநலத்தால் பொதுநலம் பாதிக்கப்படக்கூடாது'' என்றார்.
நாடக ஆர்வம்: கல்வி கற்கும் நாளிலேயே சம்பந்த முதலியார் நாடகத்தில்
ஆர்வம் கொண்டார். 1883 ஆம் ஆண்டு பள்ளி விழாவில்
அலெக்சாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில நாடகத்தில்
கள்வனாக வேடமேற்றார். பிற நாடகக் குழுக்களின் நாடகங்களைக்
காண நேர்ந்த போது நாடகக்கலை தொடர்பான சிந்தனையை வளர்க்கத் தொடங்கினார். மேனாட்டு
நாடகங்களை விரும்பிப் பார்த்தார். நம் நாடகங்களின் குறைகளைக் கண்டறிந்தார். இக்குறைகளை
நீக்க வேண்டி மேனாட்டு நாடக முறையை அறிமுகப்படுத்த எண்ணினார். இதன் விளைவாக, பயின்முறை (Amateur) நாடக
முறையில் நாடகம் படைக்க முடிவு செய்தார்.
பயின்முறை நாடகக் குழு: நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாமல், கற்றவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில்
மேற்கொள்ளும் நாடகப் படைப்பு முறையென இதனைக் கொள்ளலாம். இதுவே பயின்முறை எனப்
பெயர் கொண்டழைக்கப்பட்டது. மேனாடுகளில் இவ்வகை நாடகமுறை செல்வாக்குப் பெற்று
விளங்கி வந்தது.
சுகுண விலாச சபை: சிறுவயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்தவர், தமிழ் நாடகப்
போக்கில் இழிந்த நிலையைக் கண்டு அதில் வெறுப்புற்றிருந்தார். 1891 இல் பெல்லாரியிலிருந்து வந்த கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நடிகர் நடித்த
நாடகங்கள் இவருக்கு தமிழ் நாடகங்கள் மேல் பற்றினை உண்டு பண்ணின. அவரது நாடகக்
குழுவில் வழக்கறிஞர்களும், மருத்துவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் சேர்ந்திருப்பதைக் கண்ட சம்பந்த முதலியார்
தாமும் அது போல ஒரு நாடகக் குழு அமைக்கத் திட்டமிட்டார். சீரழிந்த நிலையில்
அவதிப்படும் தமிழ் நாடகத்தை சீர்படுத்திட வேண்டும் என்ற இவரது ஆவலும் இவரை நாடக
உலகிற்குள் புகுத்தியது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், "சுகுண
விலாச சபை" என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
இப்பயின்முறை நாடகம் தமிழகத்தில் பல பயின்முறை நாடகக்
குழுக்களின் தோற்றத்திற்குப் பிற்காலத்தில் தூண்டுகோலாக அமைந்தது. இக்குழுவில்
பங்கேற்ற அனைவரும் கல்வியறிவும், நாடக
ஆர்வமும் மிக்கவர்களாக விளங்கினார்கள்.
நாடக ஆசிரியர்: 1891
முதல் 1936 வரையில் சம்பந்த முதலியார்
குறிப்பிடத்தக்க நாடகப்பணி ஆற்றினார். தம் வாழ்நாளில் 94 நாடகங்களை
எழுதியுள்ளார். பெரும்பாலான நாடகங்களை அவரே அச்சிட்டு வெளியிட்டுள்ளார்.
தமக்கிருந்த ஆங்கிலப் புலமையில் பல ஆங்கில நாடகங்களையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற
நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். உயர்குடியில் பிறந்தவர்களையும்,
கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத்
தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி,
எம்.கந்தசாமி முதலியார் (எம். கே. ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச
அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள்.
மொழி பெயர்ப்பு நாடகங்கள்: சம்பந்த முதலியார் மேனாட்டு நாடகங்களையும் வடமொழி
நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்த்தார். தொன்ம இலக்கியங்கள் மற்றும் வரலாற்று
நிகழ்வுகளையும் நாடக மாக்கினார். சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த பிரச்சினைகளைச்
சிறு நாடகங்களாக எழுதினார்.
தமிழில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்: ஷேக்ஸ்பியரின் Hamlet, As
You like it, Macbeth, Cymbeline, Merchant of Venice என்ற
நாடகங்களை அவைகளின் சுவையோ நயமோ குறையாமல் 'அமலாதித்யன்',
'நீ விரும்பியபடியே', 'மகபதி', 'சிம்மளநாதன்', 'வணிபுர வானிகன்' என்ற பெயர்களில் தமிழ் நாடகங்களாக மொழிபெயர்த்தார்.
பிரஞ்சு மொழியிலிருந்து மோலியரின் ஒரு நாடகத்தினைக்
காளப்பனின் கள்ளத்தனம் என்ற பெயரில் நாடகமாகத் தந்தார். மேலும் வடமொழியிலிருந்து
நான்கு நாடகங்களைத் தமிழில் ழிபெயர்த்தளித்தார்.
மொழி பெயர்க்கப்பட்ட நாடகங்களின் நிகழ்வுகள்
தமிழ்ப்பாங்கானவை. பாத்திரப் பெயர்களும் அவ்வாறே அமைக்கப்பட்டன. உதாரணமாக ஹேம்லட்
அமலாதித்தன் எனவும் - மேக்பத் மகபதி எனவும் ஷைலாக் சியாம்லாலாகவும் சிம்பலின், சிம்ஹளநாதனாகவும் பெயர் மாற்றம்
செய்யப்பட்டன.
சிறந்த நாடகங்கள்: புஷ்பவல்லி, சுந்தரி,
லீலாவதி, சுலோசனா, கள்வர்
தலைவன், யயாதி, மனோகரா, சாரங்கதாரா, இரண்டு நண்பர்கள், முற்பகல் செய்யின் பி்ற்பகல் விளையும், ரத்னாவளி,
காலவரிஷி,மார்க்கண்டேயர், அமலாதித்தியன், வாணீபுர வணிகன், சபாபதி, வேதாள உலகம், பொன்
விலங்கு, மகபதி, சிறுத்தொண்டர்,
அரிச்சந்திரன், வள்ளி மணம், கொடையாளி கர்ணன், சகுந்தைலை, காளப்பன்
கள்ளத்தனம், நல்லதங்காள், ஏமாந்த
இரண்டு திருடர்கள், ஸ்திரி ராஜ்யம், இந்தியனும்
ஹிட்லரும், கலையோ காதலோ போன்றன சம்பந்த முதலியாரின்
குறிப்பிடத்தக்க நாடகப் படைப்புகளாகும்.
நாடக நூல்கள்: கீதமஞ்சரி, நாடகத்தமிழ், நாடகமேடை
நினைவுகள் (ஆறுபாகங்கள்), நடிப்புக் கலையில் தேர்ச்சி
பெறுவது எப்படி, தமிழ் பேசும் படம், பேசும்பட
அனுபவங்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
திரைப்படங்களான நாடகங்கள்: சம்பந்த
முதலியார் 1931 ஆம் ஆண்டு முதல்
திரைப்படத் துறையிலும் பணிபுரியலானார். மேடைக்கெனத் தாம் எழுதிய நாடகங்களே
திரைப்படமாக்கப் பெற்றதால் திரைப்படங்களில் பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு
ஏற்பட்டது. முதலில் சதி சுலோசனா நாடகம் திரைப்படமாயிற்று. பின்னர் 1936 ஆம் வருடம் மனோகரா திரைப்படத்தில் புருஷோத்தமனாக வேடம்
ஏற்றார். காலவரிஷி, ரத்னாவளி, லீலாவதி, சுலோசனா,
சந்திரஹரி, சபாபதி, பொங்கல்
பண்டிகை, இராமலிங்க சுவாமிகள் போன்ற நாடகங்களும்
திரைப்படமாயின.
நாடகப் பயிற்றுவிப்பாளர்: சம்பந்த முதலியார் மிகச் சிறந்த நடிகராக விளங்கினார். தான்
எழுதிய நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் வேடமேற்றார். தமது சுகுணவிலாச சபையின்
நடிகர்களுக்கு நடிப்புப் பயிற்சியும், பிற தொழில் நுட்பப் பயிற்சியும் அளித்து வந்தார்.
மனோகரா: சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் தமிழ் நாடக மேடையில்
குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெற்றது. தமது படைப்புகளில் மனோகரா நாடகம்
முதன்மையானது எனச் சம்பந்த முதலியாரே குறிப்பிடுகிறார். இந்நாடகத்தினைப் பல தொழில்
முறைக் குழுக்களும் நடத்தின. மேலும் பலமுறை பல மேடைகளில் நடிக்கவும் நேர்ந்தது.
அனுமதி பெற்றே 859 முறை இந்நாடகம்
நடத்தப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் மனோகரனாக சம்பந்த முதலியார் அவர்களே
வேடமேற்றார். இந்நாடகத்திற்கான ஒத்திகை ஆடையுடன் இரவு முழுக்க நடைபெற்றது.
ஊக்கமளித்தல்: திட்டமிடப்பெற்ற நாடக ஒத்திகை மேற்கொள்வதைக் கட்டாயமாகக்
கடைப்பிடித்தார். சக நடிகர்களின் சிறந்த நடிப்பாற்றலை மனம் நெகிழ்ந்து
பாராட்டினார். தமிழ் நாடகக் கலையை உரிய தளத்தில் கொண்டு நிறுத்தத் தமக்குத் துணை
நின்ற நெஞ்சங்களை வாழ்த்தினார். தமது நாடக மேடை நினைவுகள் எனும் நூலில் அவற்றை
உணர்ச்சிப் பொங்க வெளிப்படுத்தியுள்ளார்.
நாடகப் பங்களிப்பு: சம்பந்த
முதலியாரின் நாடகப் பங்களிப்பினை மூன்று நிலைகளாக்கிக் காணலாம்.
01. பன்முக நோக்கிலான பலவகை நாடகங்கள்
02. மேடையில் படித்தோரைப் பங்கேற்கச்
செய்தது.
03. நாடகம் நடைபெறும் கால அளவில் வரையறை
பன்முக நோக்கு நாடகங்கள்: தமிழ் நாடக மேடையில் பன்முக நோக்கிலான பலவகை நாடகங்களையும்
ஒருசேரப் படைத்தளித்த பெருமை சம்பந்த முதலியாரையே சாரும். தமது சுகுணவிலாச
சபையிலுள்ள கற்றுத்தேர்ந்த நடிகர் குழுவினரின் ஊக்கமும் இம்முயற்சிக்குக் காரணமாக
அமைந்தது.
சமூக நாடகங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலக்கட்டத்தில் தமிழ்
நாடகமேடை தெருக்கூத்து வடிவிலிருந்து சற்று மாறுபட்ட கதையமைப்பைக் கொண்ட
நாடகங்களைக் கொண்டிருந்தது.
மக்கள் தங்களுக்குள் அறிமுகமான பழங்கதைகளையே நாடகமாகப்
பார்த்து வந்தனர். சமூக உணர்வு குறித்த விழிப்புணர்வு அப்போது இல்லை. இன்பியலும், அங்க அசைவு மிக்க நகைச்சுவைகளுமே
மிகுந்திருந்தன. சம்பந்த முதலியார். இன்பியலில் சமூக உணர்வுகளை உட்புகுத்தி
நாடகமாக்கினார். மனோகரன், இருசகோதரிகள், தாசிப்பெண், புஷ்பவல்லி, உத்தமபத்தினி
போன்ற நாடகங்கள் இவ்வகை நாடகங்களாகும்.
அங்கத நாடகங்கள்: சமுதாயச்
சீர்கேடுகளை வெளிப்படுத்தும் வண்ணம் பல அங்கத நாடகங்களை (Satirical Plays) எழுதியுள்ளார். சபாபதி
நாடகம் (ஆறு பாகங்கள்) இவற்றுள் குறிப்பிடத்தக்கதாகும். அரிச்சந்திரன் நாடகக்
கதையைப் பெயர் மாற்றி சந்திரகரி என்ற பெயரில் நையாண்டி செய்தார். பொய்யை மட்டுமே
பேசுபவனாகச் சந்திரகரி படைக்கப்பட்டான்.
தொன்மக் கதைகள்: மக்களுக்குப் பிடித்தமான தொன்ம (புராண)க் கதைகளையும்
சம்பந்த முதலியார் மக்களுக்கான நாடகமாக்கினார். யயாதி, காலவரிஷி, சிறுத்தொண்டன்,
மார்க்கண்டேயன் போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும்.
நாட்டுப்புறக் கதைகள்: சம்பந்த முதலியார் நாட்டுப்புறக் கதைப் பாடல்களையும்
நாடகமாக்கினார். நல்லதங்காள், சாரங்கதாரன்
போன்றன இவற்றுள் அடங்கும். சமுதாய உணர்வுகளை இழையோட விட்ட இவரது நாடகங்கள் இன்றும்
நினைக்கத் தக்கன. இவரது புத்த அவதாரம் நாடகம் வரலாற்றை நினைவு கூரவல்லதாகும்.
பிறமொழி நாடகங்கள்: வேற்றுமொழி நாடகங்களையும், மேனாட்டு நாடகங்களையும் சம்பந்த முதலியார் தமிழாக்கம் செய்தமையும் தமிழ்
நாடக மேடைக்கு அணிசேர்த்தன. வகை வகையான நாடகங்களை எழுதியதோடு அவற்றை
மேடையேற்றியும், அச்சிட்டும் தமிழ்மக்கள் பயன் பெறச்
செய்தார்.
மேடையில் படித்தோர் பங்கேற்பு: நல்ல
நடிகர்களே நல்ல பார்வையாளரை உருவாக்க முடியும். நல்ல நடிகர்கள் உருவாகக்
கல்வியறிவு முக்கியம். இதனால் கற்றவர்கள் மேடையேறினால் தமிழ் நாடக மேடை
சீர்ப்படும் என நம்பிக்கை கொண்டார். அதன் அடிப்படையில் பயின்முறையில் சுகுண விலாச
சபாவைத் தொடங்கினார். தம்மோடு பயின்றவர்களையும், பணிபுரிந்தவர்களையும் நாடக நடிகர்களாக மாற்றினார். இத்தகைய முயற்சி தமிழ்
நாடக மேடைக்குப் புதுப்பொலிவு தந்தது. படித்தவர்களும், மேல்தட்டு
மக்களும் நாடகக் கலையைக் காணவும், ஆதரவு தரவும் இது
துணைசெய்தது. தமிழ் நாடக மேடை வளருமென்ற நம்பிக்கையை ஊட்டியது.
நாடகம் நடக்கும் கால அளவில் வரையறை: அக்கால தெருக்கூத்துகள் பல நாட்கள் தொடர்ந்து நடைபெறும்
நிலை இருந்தது. அதனைத் தொடர்ந்த நாடகங்களும் விடிய விடிய நடத்தப்பட்டு இருந்தன.
கலைஞர்களுக்குக் களைப்பு ஏற்படும் வரை கதையை இழுத்து நீட்டினர்.
சீர்திருத்தம்: சம்பந்த
முதலியார் தமது நாடகங்களுக்கான கால அளவினைக் குறைத்தார். நாடக உரையாடல்களை
உள்ளபடியே பேசி நடிக்க வேண்டுமென்பதில் கண்டிப்புக் காட்டினார்.
பாடல்களைக் குறைத்தார். நாடகங்களின் இயல்புத் தன்மைக்கு
முக்கியத்துவம் தந்தார். இதனால் நாடகம் நடைபெறும் கால அளவு கட்டுப்படுத்தப்பட்டது.
மறைவு: சட்டம் பயின்று தேர்ந்து, புகழ் பெற்றபோதும், நாடகக் கலைக்குத் தன் உழைப்பை
நல்கியவர் சம்பந்த முதலியார். கட்டுப்பாடு, கலை உணர்வு,
ஒழுக்க மேம்பாடு இவற்றைக் கொண்டு தமிழ் நாடகக் கலைக்கு உயர்வு
தேடித் தந்தவர். நாடகம் தொடர்பான பல ஆய்வுரைகளை வழங்கியவர். 1943இல், ஈரோட்டில் நாடகத்தமிழ் மாநாட்டில் நாடகத்
தமிழ்க்கொடி ஏற்றி வைத்தவர். தமிழ் நாடக ஆர்வலர்களால் போற்றப்பட்டவர். தொழில்
முறைசார் நாடகக் குழுக்களுக்கும் தம் ஆதரவை நல்கியவர். நாடகக் கலைக்கு தம் 81வது வயது வரை பெரும்பணி ஆற்றினார். கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம்
சொல்லியே பிறரை எழுத வைத்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சம்பந்த முதலியார் அவர்கள்
24 செப்டம்பர் 1967ல் இவ்வுலக வாழ்வை
நீத்தார்.
விருதுகளும் சிறப்புகளும்:
* 22வது வயதில் அவருடைய முதல் நாடகம் 'லீலாவதி-சுலோசனா' என்ற பெயருடன் அரங்கேறியது.
* மொத்தம் 80 நாடகங்கள்
எழுதினார்.
* 1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது
பெற்றார்.
* 1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும்
பெற்றார்.
* தன் நாடகங்களில் சிலவற்றில்செய்யுள்,
கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
* தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த
மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்: பம்மல் சம்பந்த முதலியார் இயற்றி, தமிழ் நாட்டரசு நாட்டுடைமையாக்கிய
நூல்களின் பட்டியல்.
தமிழ்:
01. இந்தியனும்-ஹிட்லரும்
02. இல்லறமும் துறவறமும்
03. என் சுயசரிதை
04. என் தந்தை தாயர்
05. ஒன்பது குட்டி நாடகங்கள்
06. ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம்
பாகம்
07. கலையோ-காதலோ? அல்லது
நட்சத்திரங்களின் காதல்
08. கள்வர் தலைவன்
09. காதலர் கண்கள்
10. காலக் குறிப்புகள்
11. சபாபதி
12. சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
13. நான் குற்றவாளி
14. சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
15. தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல்
பாகம்)
16. தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை
(இரண்டாம் பாகம்)
17. தீபாவளி வரிசை
18. தீயின் சிறு திவலை
19. நாடகத் தமிழ்
20. நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
21. நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
22. பலவகை பூங்கொத்து
23. மனை ஆட்சி
24. மனோகரா
25. மூன்று நகைச்சுவை நாடகங்கள்
26. யயாதி
27. வாணீபுர வணிகன்
28. விடுதிப் புஷ்பங்கள்
ஆங்கிலம்:
01. Amaladitya
02. an Adaptation of Shakespear's as We Sow-so We Reap
03. Blessed in a Wife
04. Brahmin Versus Non-brahmin
05. Bricks Between and at Any Cost
06. Chandrahari
07. Dikshithar Stories
08. Harischandra
09. Humorous Essays
10. Lord Buddha
11. Mixture
12. Over Forty Years Before the Footlights-1
13. Over Forty Years Before the Footlights-2
14. Sahadeva's Stratagem
15. Sarangadara
16. Sati Sakti a Farce in Tamil,sati Sulochana
17. Siruthondar
18. Siva Shrines in India & Beyond Part - Ii
19. Siva Shrines in India & Beyond Part - Iii
20. Siva Shrines in India & Beyond Part Iv,siva
Shrines in India & Beyond Part-v
21. Siva Temple Architecture Etc,
22. Subramanya Shrines in Tamil
23. The Fair Ghost
24. The Good Fairy
25. The Good Sister
26. The Gypsy Girl and Vaikunta Vaithiyar
27. The Idle Wife
28. The Knavery of Kalappa
29. The Surgeon General's Prescription and Vichu's Wife
30. The Wedding of Valli
மதிப்பீடு வினாக்கள்:
01. சம்பந்த முதலியாரின் பெற்றோர் யாவர்?
02. சம்பந்த முதலியார் தோற்றுவித்த பயின்முறை
நாடக சபையின் பெயர் என்ன?
03. மேக்பத் என்ற நாடகத்திற்கு, சம்பந்த முதலியார் இட்ட பெயர் யாது?
04. மனோகரா நாடகம் அனுமதி பெற்று எத்தனை முறை
மேடையேற்றம் செய்யப் பெற்றது?
05. சம்பந்த முதலியார் நாடகங்களில்
திரைப்படமாக மாற்றம் கண்டவற்றுள் ஐந்தினைக் குறிப்பிடுக.
06. தமது நாடக அனுபவங்களை எந்த நூலின் வழி சம்பந்த
முதலியார் வெளிப்படுத்தியுள்ளார்?
No comments:
Post a Comment