Friday 21 February 2014

உடுமலை நாராயணகவி-தமிழ் அறிஞர்கள்



பகுத்தறிவுக் கவிராயர், முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் என பன்முகங்களோடு விளங்கியவர் உடுமலை நாராயணகவி அவர்கள். அற்புதமான சீர்திருத்தப் பாடல்களால் புகழ்பெற்ற இவர் தொழிலால்தான் ஜாதி என்று நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். இவர் தமிழுக்கு ஆற்றிய அரும்பணியை, தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு.
பிறப்பு:
 உடுமலை நாராயணகவி அவர்கள் கொங்கு நாட்டில் கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டத்தில் உள்ள பூளவாடி என்னும் சிற்றூரில் 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி பிறந்தார். அவர் பெற்றோர்கள் கிருட்டினசாமி செட்டியார், முத்தம்மாள் ஆவர். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். தம் தமையனார் தனுக்கோடி அவர்களின் ஆதரவில் வளர்ந்தார். இவர் தீப்பெட்டி வணிகத்தில் ஈடுபட்டு, தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று சுற்றுப்புறச் சிற்றூர்களில் விற்று வாழ்க்கை நடத்தினார்.
கல்வி: 
நான்காம் வகுப்போடு திண்ணைப் படிப்பினை நிறுத்திக் கொண்டார். புலவர் பாலசுந்தரம்பிள்ளை இவருக்கு ஆசிரியராக இருந்தார். முத்துசாமிக்கவிராயரிடம் சுமார் 15 ஆண்டுகள் தமிழ்க் கல்வியைக் கற்றார். தவத்திரு சங்கரதாசு சுவாமிகளிடம் நாடகத்தையும், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் கதை இசைக் கலையையும் கற்றுக் கொண்டார்.
தேசபக்தி: 
இளமையில் நாட்டுபுறக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தப்பாட்டம், உடுக்கைப்பாட்டு, ஒயில்கும்மி போன்றவற்றில் மிகவும் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்ட நாராயணகவி அவர்களுக்குத் தேச விடுதலை மீது நாட்டமும், தேசபக்தியும் மிகுந்திருந்தன. அன்னியத் துணிகளைப் புறக்கணிக்க வேண்டும், சுதேசி ஆடைகளை அனைவரும் அணிய வேண்டும் என்ற உணர்வின் காரணமாக ஒரு கதர்க் கடையைத் தொடங்கினார். ஊர் ஊராகச் சென்று தேச விடுதலைப் பாடல்களைப் பாடிக் கதர்த் துணிகளை விற்பனை செய்தார்.
பாரதியாருடன் சந்திப்பு:
 வறுமையில் வாடினாலும், கவிதை ஆர்வத்தில் தமது பதினைந்தாவது வயதில் மகாகவி சுப்பிரமணி பாரதியாரைச் சந்தித்தார். அதன் பின்னர் அவர் மனத்தில் கனன்று கொண்டிருந்த தமிழார்வம் என்னும் தீயானது சுடர்விட்டு எரியத் தொடங்கியது.
திருமணம்: பேச்சியம்மாள் என்ற பெண்ணை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். அவருக்கு நான்கு மகன்கள்.
முற்போக்குச் சிந்தனை:
பெரியாரின் அன்புத் தொண்டரான உடுமலையார் அவர்கள் பொதுவுடைமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போக்கான சிந்தனைகளை தந்தை பெரியாரின் மூலம் கற்றார். பெரியாரின் குடியரசு இதழில் உடுமலையார் தொடர்ந்து எழுதி வந்தார். தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளின்போது
பழமையான மூடப் பழக்க வழக்கத்தில்
பாழ்பட்ட நெஞ்சர்க்குப் புரியார்
படித்துணர்ந்து பகுத்தறிவுக் காட்சிதன்னைப்
பரவச் செய்து வரும் நெறியார்
 - என்று பாடல் எழுதி வாழ்த்தினார்.
கோவலன் கண்ணகி, வள்ளித் திருமணம், பவளக்கொடி, நந்தனார் ஆகிய நாடகங்களையும், அதற்குரிய பாடல்களையும் எழுதினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு என்ற நாடகத்திற்கு உடுமலையார் பாடல்கள் எழுதினார்.
திரையுலகப் பணி:
 நாடகத் துறையிலிருந்து திரைப்படத் துறைக்கு 1933-ல் வந்து திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்த நாராயணசாமி ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ளார். திரைப்பட பாடல்கள் எழுத ஆரம்பித்த பிறகு தனது பெயரை நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். 
நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவமும், எவ்வகையிலும் தலை வணங்காத உறுதியான உள்ளம் படைத்தவர். பிறருக்கு உதவும் மனம் படைத்தவர். திரையுலகில் தனக்கென தனிமதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.
உடுமலையாரைப் போலப் புலமைப்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் எவருமில்லை. உடுமலையாரின் திரைப்பட பாடல்கள் குறித்து நாம் எழுதும் பக்கம் பக்கமான வசனங்களுக்குப் பத்து வார்த்தைகளில் பாடல்களின் மூலம் கருத்தினை விளக்கிடுவார்என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் புகழ்ந்துரைத்தார்.
அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு "கிந்தனார் கதாகாலட்சேபம்" எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
நகைச்சுவை மன்னன் கலைவாணரின் கணிப்பில் அவர் ஒரு திரையுலக பாரதி, பாட்டுகளின் வயிற்றில் பகுத்தறிவு பால் வார்த்தவர். திரைப் பாடல்களுக்கு இலக்கிய மதிப்புக் கொடுத்தவர்.
மானமும், அறிவும் மனிதருக்கு அழகு என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை மானமெல்லாம் போன பின்னே வாழ்வதுதான் ஒரு வாழ்வா?
விசுவாமித்திரர் என்ற திரைப் படத்தில்
மோட்ச லோகம் கண்டதற்கு
சாட்சியம் உண்டா?
உங்கள் மூளையைக் குழப்பிவிட்ட
ஆளையும் கொண்டா?
என்ற பாடலையும்,
டாக்டர் சாவித்திரி என்ற திரைப்படத்தில்
காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு இப்ப
ஊசியைப் போட்டா உண்டாகுமென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு
போன்ற திரைப்படப் பாடல்களின் மூலம் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பினார்.
கல்வியைப் போலொரு செல்வம் உள்ளே
காணவேணும் புவியோரே
என்ற பாடலின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
முதல் தேதி என்ற படத்தில்
ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் - இருபத்
தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும்
திண்டாட்டம்
என்ற பாடலின் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் அவல வாழ்க்கையை வெளிப்படுத்தினார்.
மக்கள் மனத்தில் நேர்மையையும், நாணயத்தையும் வளர்ப்பதற்கு விவசாயி என்ற திரைப் படத்தின் மூலம்
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாளும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
என்ற கருத்தை வலியுறுத்தினார்.
பொன்னி என்ற திரைப் படத்தில்
பணக்காரர் தேடுகின்ற இன்பம் - எழை
பாட்டாளி மக்கள் படும் துன்பம் மற்றும்
விடுதலை விடுதலை
அடிமை ஏழையென எவருமில்லை இனி
போன்ற பாடல்களின் மூலம் தொழிலாளர்களின் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார். மேலும், மக்கள் மத்தியில் மனிதநேயம் மறந்து நுகர்வுக் கலாச்சாரம் வளர்ந்து, மனித உறவுகள் சீர்கேடு அடைந்துள்ளதைக் குலமும் குணமும் சந்தியிலே இப்பப் பணந்தான் பேசுது பந்தியிலே என்று சாடுகிறார்.
ரங்கோன் ராதா என்ற திரைப் படத்தின் மூலம் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் அத்து மீறல்களையும், அக்கிரமங்களையும்
என்றுதான் திருந்துவதோ நன்றிகெட்ட
ஆடவர் உலகம் - இனி
என்றுதான் திருந்துவதோ
தொன்றுதொட்டு வந்த மடமை
சொல்ல வெட்கம் ஆகுதையா
கொடுமை கொடுமை
என ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை அம்பலப்படுத்தினார்.
மேலும், மதுவின் கேடு, கல்வியின் அவசியம், தீண்டாமைக் கொடுமை, வறுமை, அறியாமை, பிறப்பினால் ஏற்றத் தாழ்வு, அரசியல்வாதிகளின் அராசகம், போலிச் சாமியார்களின் ஏமாற்று, பகுத்தறிவு, தன்மதிப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவைகள் குறித்துத் தனது திரைப்படப் பாடல்களின் மூலமாக மக்களிடம் கருத்துக்களைப் பரப்பினார். இவரது திரைப்படப் பாடல்கள் வெறும் பதிவுகளாக இல்லாமல் சமூக மாற்றத்திற்கான சக்திகளாகவும் விளங்கின.
இவர் பாடல்கள் குறித்துத் தந்தை பெரியார் அவர்கள் உயரிய முறையில் உள்ளன; தொழிலாளர் மேன்மை, பெண்களின் உரிமை, கடமை மற்றும் பணக்காரர்களின் கொடுமை, காதலின் உயர்வு போன்ற நற்கருத்துக்களைத் தூய தமிழில் நயமுடன் கவிதை வடிவில் ஏற்ற மெட்டுகளுடன் இனிதாக உள்ளன என்று பாராட்டியுள்ளார்.
உடுமலை நாராயணகவி அவர்களைத் திராவிட மரபுத் திரைப்பட தயாரிப்பாளர்கள், வசனகர்த்தாக்கள், இயக்குநர்கள், நடிகர்கள் போன்றோர். ஊக்குவித்தார்கள். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் உடுமலை நாராயணகவி அவர்கள் வெறும் சினிமா கவிஞர் மட்டுமல்லர், அவர் ஒரு சிந்தனை கவிஞர். பாமர மக்களின் உள்ளத்திலே பதியத்தக்க அளவிற்கு அவர் கருத்துக்களை எடுத்துச் சொன்னவர்.  மேலும், கலைவாணரும், உடுமலை நாராயணகவியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கருத்துப் புரட்சியை உண்டாக்கினார்கள். தமிழர் தந்த அரிமா கவிஞர்என்று புகழ்கின்றார்.
பட்டம்: 
1967-இல் சங்கீத நாடகச் சங்கத்தால் சிறந்த பாடலாசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீதிபதி கோகுல கிருட்டினன் இவருக்கு சாகித்யா ரத்னாகர் என்னும் பட்டத்தை அளித்தார்.
மறைவு: 
தெருக்கூத்து, தெம்மாங்கு, வில்லுப்பாட்டு, தாலாட்டு, ஒப்பாரி, வழி நடைச் சிந்து, நாடகப் பாடல் இலாவணி, வண்டிக்காரன்பாட்டு, பள்ளுப்பாட்டு, தேசிங்கு ராசன் பாடல், குறத்திப் பாட்டு, குறவஞ்சி, கோமாளிப் பாட்டு என்று அனைத்து நாட்டுப்புறப் பாடல் வடிவங்களையும் திரைப்படங்களுக்காகப் பயன்படுத்திய உடுமலை நாராயணகவி அவர்கள் கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி, மனித நேயர் என பன்முகங்களோடு விளங்கிய பண்பாளர் உடுமலையார், 23.05.1981-இல் பூளவாடியில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
மணி மண்டபம்: 
இந்திய அரசு அவரது நினைவை போற்றும் வகையில் 31.12.2008 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு 2001-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணக்கவி அவர்களின் மணி மண்டபத்தைத் கலைஞர் மு.கருணாநிதி திறந்து வைத்தார். இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
கவிஞர் என்பவர் தான் சார்ந்துள்ள சமூகம் சீர்மையுற சமுதாய அக்கறையுடன் தன் சிந்தனைகளை பாடலாக்கி மக்களை செம்மைப்படுத்த வேண்டும். அந்த வகையில் உடுமலையார் மனித வாழ்வுக்குரிய நெறிமுறைகளை தனது திரைப்படப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார். காலம் உள்ளவரை அவரது கருத்துக்கள் என்றென்றும் நம்மோடு நிலைத்து வழிகாட்டும்.

No comments:

Post a Comment