Showing posts with label தெனாலி ராமன் கதைகள். Show all posts
Showing posts with label தெனாலி ராமன் கதைகள். Show all posts

Saturday, 15 February 2014

தெனாலி ராமன் கதைகள்




ஒரு முறை தெனாலிராமன் அரசவைக்குள் செல்ல முயன்றான்.அப்போது காவலர் அவனை வழி மறித்தனர்.
"
ஏன் என்னை வழி மறிக்கிறீர்கள்?" என்று கேட்டபோது," எங்களைக் கவனித்துவிட்டுச் செல்" என்றனர் காவலர்.அப்போது ராமன் புரிந்து கொண்டான்.அவர்கள் கையூட்டுக் கேட்கின்றனர் என்பதை.அவர்களுக்கு அவர்கள் வழியிலேயே சென்று அறிவுறுத்தவேண்டும் என முடிவு செய்து கொண்டான்.
"
ஐயா, நான் ஒரு புலவன் அரசரிடம் பாடிக் காட்டிப் பரிசில் பெற்றுப் போகவே வந்தேன்.உங்கள் விருப்பப் படியே அரசர் கொடுக்கும் பரிசிலை நான் அப்படியே உங்களிடம் தந்து விடுகிறேன். நீங்கள் பார்த்துக் கொடுப்பதை நான்பெற்றுச் செல்கிறேன்." என குழைந்து பேசினான்.
காவலரும் அவனை எச்சரித்து உள்ளே அனுப்பினர். 
அவைக்குள் நுழைந்த ராமன் மக்களுடன் கலந்து அமர்ந்து கொண்டான்.அந்த அவைக்கு பல வழக்குகள் வந்தன. அவற்றுக்கெல்லாம் அப்பாஜி யின் ஆலோசனையின் படி மன்னர் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.அப்போது மூன்று சகோதரர்கள் வந்து ராயரை வணங்கி நின்றனர்.
அவர்களின் வழக்கு என்ன என்று மன்னர் கேட்டார். வந்த மூவரில் மூத்தவன் கூறினான்.
"
மகாராஜா, எங்கள் தந்தையார் ஒரு யானைப் பாகன். அவரிடம் இருந்த சொத்துக்கள் மொத்தம் பதினேழு யானைகள்தான்.அவற்றை எங்களுக்குப் பாகம் பிரித்து எழுதி வைத்துள்ளார்."
"
அப்புறமென்ன? அவரது சொல்படி பாகத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டியதுதானே? அதிலென்ன சிக்கல்?"
"
அதில்தான் சிக்கல் மகாராஜா,"
அமைதியாக நின்றிருந்த அப்பாஜி கேட்டார்."உங்கள் வழக்கை விவரமாகக் கூறுங்கள்.அப்போதுதான் மன்னர் சரியான தீர்ப்பு வழங்க முடியும்."
இப்போது இரண்டாவது மகன் கூறினான்."பிரபு, எங்கள் தந்தையார் மூத்தவனுக்கு சரிபாதி யானையைத் தரச் சொல்லியுள்ளார்.பதினேழில் பாதி எட்டரை அல்லவா?எப்படிக் கொடுப்பது? முதலாவதுதான் சிக்கல் என்றால் அடுத்தது அதற்குமேல் இருக்கிறது."
"
அதையும் சொல்லிவிடப்பா."என்றார் அப்பாஜி.
இரண்டாவது மகனான எனக்கு மீதியில் மூன்றில் ஒரு பங்கு.எட்டரையில் மூன்றில் ஒரு பங்கு எப்படிக் கணக்கிடுவது?"
"
மூன்றாமவனுக்கு?"என்று கேட்ட ராயரிடம் "மீதியில் மூன்றில் ஒரு பங்கு என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார். இந்த உயிலின் படி தாங்கள்தான் எங்களின் பாகத்தைச் சரியாகப் பிரித்துத் தரவேண்டும்."என்று வேண்டுகோள் வைத்தான் மூன்றாவது மகன்.
அப்பாஜியும் கிருஷ்ண தேவராயரும் சிந்தனை வசப்பட்டனர்.எவ்வளவு யோசித்தும் கணக்கைத் தீர்க்கும் வழி தோன்றவில்லை.ஆனால் இதில் ஏதோ ரகசியம் இருக்கும் என்று மட்டும் மன்னருக்குத் தெரிந்தது. ஆனால் என்னவென்று புரியவில்லை.
வெகு நேரம் சபை அமைதியாக இருந்தது.மக்களின் கூட்டத்திலிருந்து தெனாலிராமன் எழுந்து நின்றான்.
"
மாமன்னர் என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் சம்மதித்தால் இந்த வழக்கை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றான் வணங்கியபடியே.
ராமகிருஷ்ணனைக் கண்டு மன்னர் புன்னகைத்தார். "வா ராமகிருஷ்ணா, உன் தீர்ப்பை நீ சொல்."
ராமன் உடனே ஓடிச் சென்று சபை நடுவே நின்றான்.
"
மகாராஜா, இப்போது பதினேழு யானை பொம்மைகளைக் கொண்டு வரச் சொல்லுங்கள்." என்றான்.அதன்படியே பொம்மைகள் ராமனுக்கு முன்னால் வைக்கப் பட்டன.
"
எல்லோரும் பாருங்கள்.இப்போது நானும் ஒரு யானையில் வருகிறேன்.எங்கே இன்னொரு யானைபொம்மை கொண்டு வாருங்கள்."
இன்னொரு யானை பொம்மை கொண்டு வரப்பட்டது.
ராயர் கேள்விக்குறியுடன் ராமனைப் பார்த்தார்.ராமன் "மகாராஜா மன்னிக்க வேண்டும்.நீதி சொல்லும் நான் யானையின் மேல் வரக்கூடாதா?"என்று சொல்லவே சிரித்தபடி அனுமதியளித்தார் ராயர்.
இப்போது ராமன் கணக்கை சீராக்கத் தொடங்கினான்."ஐயா,இப்போது மொத்தம் பதினெட்டு யானைகள் உள்ளன அல்லவா? முதல் மகனான உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"
இவற்றில் சரி பாதி."
"
அப்படியானால் ஒன்பது.சரிதானே?"
"
சரிதான் ஐயா."தன்னிடம் கொடுக்கப்பட்ட ஒன்பது யானைகளுடன் அவன் விலகி நின்றான்.."அடுத்த மகன் வாருங்கள்" அடுத்தவன் வந்து நின்றான்.
"
உங்களுக்கு எவ்வளவு யானைகள்?"
"
மீதியில் மூன்றில் இரண்டு பங்கு."
"
மீதி எவ்வளவு?" 
"
ஐயா,மீதி ஒன்பது அதில் மூன்றில் இரண்டு பங்கு ஆறு."
"
இதோ உமக்கு ஆறு யானைகள்."கடைசியாக மீதி மூன்று யானை பொம்மைகள் இருந்தன.மூன்றாமவனை அழைத்த ராமன் "உமக்கு எவ்வளவு யானைகள் ?" என்று கேட்டான்.
அவனும் "எனக்கு மீதியில் மூன்றில் இரண்டு பங்கு" எனக கூற அவனுக்கு மீதியிருந்த மூன்று யானைகளில் இரண்டு யானையைக் கொடுத்தான் ராமன். 
"
இப்போது மீதி இருப்பது ஒரு யானை. நான் ஏறி வந்த அந்த யானையின் மீதே நான் ஏறிச் செல்லலாமா மகாராஜா"?என்று கேட்டுவிட்டு பணிவுடன் நின்றான் ராமன்.
உயிலின்படி முதல் மகனுக்கு ஒன்பது யானைகளும் இரண்டாவது மகனுக்கு ஆறு யானைகளும் மூன்றாவது மகனுக்கு இரண்டு யானைகளும் உரியன என தீர்ப்புக்கூறினார் மன்னர்.சிறப்பாக பாகப்பிரிவினை செய்த தெனாலிராமனைப் பாராட்டிய ராயர் அவனுக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்டார்.
தெனாலி ராமனுக்கு உடனே வாயில்காப்போனின் நினைவு வந்தது.
"
மகாராஜா, நான் கேட்கும் பரிசைத் தாங்கள் தட்டாமல் தரவேண்டும்.மறுக்கக்கூடாது."
"
மறுக்கமாட்டேன். கேள் ராமகிருஷ்ணா"
"
எனக்குப் பரிசாக நூறு கசையடிகள் வேண்டும்.அதையும் இந்தச் சபையிலேயே தரவேண்டும்."
அனைவரும் திகைத்தனர்.ராமனுக்கு என்ன பைத்தியமா?
ஆனால் ராமன் மீண்டும் அதையே கூறவே வேறு வழியில்லாமல் மன்னரும் காவலனிடம் ராமனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கும்படி ஆணையிட்டார்.அவனும் கசையைத் தடவியபடி வந்து நின்றான்.அப்போது ராமன் "மகாராஜா, எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை ஒருவருக்கும் மீதியை மற்றொருவருக்கும் தருவதாக வாக்களித்துள்ளேன் அவர்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரவேண்டும்."என்றான்.
ராயர் புரிந்து கொண்டார். அவர் கண்கள் சிவந்தன.உடனே அவர்களை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்.இரண்டு வாயில் காப்போரும் நடுங்கியபடியே வந்து நின்றனர்.
மன்னர் "என் நாட்டிலே லஞ்சமா கேட்டாய்?அரண்மனையில் பணிபுரியும் நீ லஞ்சம் கேட்டதற்காக உன் தலையைக் கொய்தால் என்ன?"
எனக் கேட்டு அவர்களுக்கு ஐம்பது கசையடிகள் கொடுத்துச சிறையிலும் அடைக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.
பின்னர் ராமகிருஷ்ணனுக்குப் பெரும்பொருள் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினார்.
சரியானபடி தீர்ப்புக் கூறியதுமல்லாமல் லஞ்சம் கேட்டவனுக்கும் அறிவு வரும்படி செய்த தெனாலிராமனைப் பாராட்டியபடி மக்கள் கலைந்து சென்றனர்.

பிறந்த நாள் பரிசு




மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.


பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

""
அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""
அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""
பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

புலவரை வென்ற தெனாலிராமன்




ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். 

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான். 

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான். 

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர். 

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.