Wednesday, 12 February 2014

ஆத்திசூடிக்கதைகள் -2. ஆறுவது சினம்



கோபத்துக்கு இடம் கொடுக்காமல் அதை அடக்கவேண்டும் என்பது இதன் பொருள்.

மனிதர்களிடத்தில் இயல்பாக இருக்ககூடிய குற்றங்களில் மிகவும் பொல்லாதது கோபம். ஒருவனுக்கு கோபம் ஏற்படும் நேரத்தில் அவன் பைத்தியம் பிடித்தவனைப்போல தன் வசம் தப்பி நடக்கின்றான். அதனால் கோபமடைந்தவன் பழிபாவங்களுக்கு அஞ்சாதவனாய்,இரக்கமற்று படித்திருந்தும் அறிவிழந்து கற்ற நல்லொழுக்கங்களை தவற விட்டு மானமிழந்து பலராலும் வெறுக்கப்படுவான் அதனால்த்தான் கோபம் சண்டாளம் என்று உலகத்தில் சொல்வது வழக்கம்.

தன்னைவிட வலிமையானவர் மேலும்,தனக்கு ஒத்து போகிறவர்கள் மேலும் உண்டாகும் கோபத்தை அடக்குவது ஒன்றும் சிறந்ததில்லை, மேலானவன் மேல் தன் கோபத்தைக் காண்பித்தால் அவன் மலையின் மேல் மோதும் மண்பாண்டம் என்ன ஆகுமோ அதுபோல உடைந்து போய் விடுவான்.

ஆகவே சுய அபிமானத்தால் கோபத்தை அடக்குவது என்பது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. தன்னைவிடத் தாழ்ந்தவர் மீது ஏற்படும் கோபத்தை அடக்குபவனே மிகச்சிறந்தவன். 

சில சமயங்களில் கோபம் கொலைக்கும் காரணமாகிறது.பிறரைக் கொல்லுவதோடு தன்னையும் சிலவேளைகளில் கொன்று கொல்கிறான்.இதனால்த்தான் சினம் சேர்ந்தாரை கொல்லியென்று கூறினார்கள்போலும்.பெருந்தீமையை விளைவிக்கும் இந்தக் கோபத்தை இளைமையில் இருந்தே அடக்க முயற்சிக்க வேண்டும். 

சரி இனி கதைக்கு வருவோம்: 

உலகத்தில் மனிதர்களில் பலபேர்கள் ஒழுக்கம் குறைந்து தர்மத்தை விட்டு மிகவும் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று வெறுத்துப்போய் மனிதர்கள் இல்லாத இடத்தில் இருக்க விரும்பி கோதாவரிக் கரையில் தனிமையாய் பர்ணசாலை ஒன்று அமைத்து தன்னுடைய விரத அனுஷ்டானங்களை செய்து வந்தார் அந்தணர் ஒருவர்.இதனால் மோட்ஷத்தை அடையலாம் என்பது அவரின் எண்ணம்.

ஒரு நாள் அவர் ஆற்றில் மூழ்கி எழுந்து தன் உடம்பெங்கும் விபூதியை பூசிக்கொண்டு உருத்திராட்ச மாலைகள் அணிந்து ஒருபுறமாய் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது வெயிலில் களைத்துப்போய் வந்த ஏழை ஒருவன் அங்கு இவர் இருந்த நிலையை கவனியாமல் ஆற்று நீரில் இறங்கி முழுகி தன்னுடைய அழுக்கடைந்த கந்தை துணிகளை
அங்கிருந்த கல்லின்மேல் அடித்து துவைக்க ஆரம்பித்தான்.

அப்போது துணியிலிருந்த நீர்த்துளிகள் ஜபம் செய்து கொண்டிருந்தவர் மேல் பட்டவுடன் சட்டென்று கண்களை திறந்து பார்த்தவருக்கு கடுங்கோபம்,உடன் ஆவசத்துடன் எழுந்து ஓடிச்சென்று அந்த ஏழையை அடித்து அடேய்! நீ கொஞ்சம்கூட பயமில்லாமல் இங்கு வந்தது மட்டுமில்லாமல்
என் மேல் உன் அசிங்கமான அழுக்குத் துணியில் உள்ள தண்ணீரை தெரித்து என் விதத்திற்கு பங்கம் செய்துவிட்டாய் இனி ஒரு கண நேரம் இங்கு நின்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் ஓடிப்போஎன்று அதட்டினார்.

அந்த ஏழை உடனே அவரின் காலில் விழுந்துஐயா நீங்கள் இருந்ததை அறியாமல் இப்படி செய்து விட்டேன் பொறுத்து அருளவும் இதோ நான் வெகு தூரம் போய் விடுகிறேன்என்று பணிவோடு சொல்லி வணங்கி எழுந்து அங்கிருந்து சென்றுவிட்டான்.

அழுக்கு துணிகளில் உள்ள நீர்த்துளிகள் பட்டு தீட்டடைந்து விட்டது என்று இவர் மீண்டும் நதியில் இறங்கி மூழ்கி குளித்து கரையேறினார்.அப்பொழுது சிறிது தூரத்தில் அந்த ஏழையும் மறுபடி ஒரு முறை ஆற்றில் மூழ்கி கரை சேர்ந்ததை பார்த்து அவனை சத்தமாக கத்தி கூப்பிட்டு அடேய் பாவி நான் உன்னை தீண்டின தீட்டுக்காக மீண்டும் தலை மூழ்கினேன் நீ எதற்காக இன்னொரு முறை மூழ்கினாய்?”என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழைஐயனே!என்னைத்தீண்டிய தோஷத்திற்கு நீங்கள் மூழ்கினீர்கள் கோபமாகிய சண்டாளன் உங்கள் மேல் ஆவேசித்திருந்தபோது நீங்கள் என்னை தீண்டியதால் நேரிட்ட பெருந்தோஷத்திற்காக நான் மீண்டும் தலை முழுகினேன்”! என்று மறுமொழி சொன்னான். அப்பொழுதுதான் அவர் தனக்குள் கோபம் என்ற ஒன்று வந்ததால் எப்படி இப்படியோர் இழிந்த செயலை செய்து விட்டோம் என்று உணர்ந்து வருந்தி அவனிடம் சென்று தலைவணங்கி அவனையே குருவாகக்கொண்டு கோபத்திற்கு இடங்கொடாமல் நன்னெறியில் நின்றார்.

கோபத்தை மனதார அடக்கியவன் மனிதர்களுள் உயர்ந்தவன் ஆவதோடு தெய்வமாகவும் எண்ணப்படுவான்.சினத்தை விட்டவன் ஏழையாயினும் உயர்ந்தோனே!.

No comments:

Post a Comment