Monday 17 March 2014

கூட்டு முயற்சி-நீதிக் கதைகள்

கூட்டு முயற்சி...!


கோடைக்காலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப்பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்கவிடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராக பறந்தது. அது பக்கத்து நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் உயரமாக பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் மேயர்.

“இந்த காற்றாடி பறந்ததற்கு யார் பொறுப்பு?” எனக் கேட்டார் மேயர்.

“நான் தான்” என்றான் சிறுவன். “நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதை பறக்க வைத்தேன்” என்றான் அவன்.

“நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்று “என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும் சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.

“இல்லை நான் தான் காற்றாடி பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால். “நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாக பறக்கவும் காரணம். நானில்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடில்லாமல் சுற்றி தரையில் விழுந்திருக்கும் அதை அந்த பையனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது அது.

இப்போது, உங்களைப் பொறுத்தவரை யார் உண்மையில் காற்றாடியை பறக்க வைத்தார்?

பல சமயங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால் மட்டுமே நடந்ததாக நினைக்கின்றனர். மற்றவர்கள் இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது. ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது. ஏனெனில் கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும்போது நமக்கு சகிப்புத் தன்மை, பல விதமான சூழ்நிலைகளை கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்.

இங்கு யாரும் தனியானவர்கள் இல்லை. எனவே மற்றவர்களையும் எப்போதும் நினைவில் வையுங்கள்!

No comments:

Post a Comment