டக்குடக்கு கடிகாரம்
தட்டு நிறைய பணியாரம்
குட்டிகுட்டி சுண்டெலிகள்
எட்டிஎட்டிப் பார்த்தனவே
டண்டண் என்றது கடிகாரம்
தாவி வந்தது கரும்பூனை
கண்டு மிரண்ட சுண்டெலிகள்
காற்றாய் பறந்து மறைந்தனவே******நானானி
குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் வந்ததாம்
பாவம் அதற்கு பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்*******நிஜமா நல்லவன்
அணிலே அணிலே ஓடிவா!
அழகிய அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா!
குண்டு பழம் கொண்டுவா!
பாதி பழம் உன்னிடம்
மீதி பழம் என்னிடம்!
கொறித்து கொறித்து தின்னலாம்********ஆஷிஷ் அம்ருதா
வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சினஞ்சிறு கைகளால்செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய் தோன்றும் முயலக்கா**********நிஜமா நல்லவன்
கோழி கிளறினால் வேலி போடலாம்
வாடா கண்ணா வா!
வேலியை ஆடு தாண்டிவிடுமே
போடா வரமாட்டேன்!
கீரை விதைப்போம் கீரை விதைப்போம்
வாடா கண்ணா வா!
கீரை வளரத் தண்ணீர் வேண்டுமே
போடா வரமாட்டேன்!
கேணி நீரை இறத்துக் கொள்ளலாம்
வாடா கண்ணா வா!
கீரை வளர்ந்தபின் என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!
கீழைத் தெருவில் விற்றுவிடலாம்
வாடா கண்ணா வா!
விற்ற பணத்தை என்ன செய்வது?
போடா வரமாட்டேன்!
வீணாக்காமல் வங்கியில் சேர்ப்போம்
வாடா கண்ணா வா!
வீடும் நாடும் வாழ்த்த வாழ்வோம்
வா வா அண்ணா வா!*********************பாசமலர்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு
உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு
பாலை நன்றாய் குடிக்குது கன்றுக்குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு
மடிமுட்டி குடிக்குது கன்றுக்குட்டி*********நிஜமா நல்லவன்
யானை யானை அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டிக்கரும்பைக் கடிக்கும் யானை
காவேரித்தண்ணீரைக் கலக்கும் யானை***********பொன்வண்டு
No comments:
Post a Comment